கல்லூரிகளில் அதிகரித்து வரும் ராகிங் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உச்சநீதிமன்றமே தலையிட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வரும் போதிலும் இந்த இழிச்செயல் இன்னும் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாமலேயே இருக்கிறது.
சமீபத்தில் ராகிங் கொடுமைக்கு மருத்துவக் கல்லூரி மாணவன் ஒருவன் பலியாகியிருப்பது இந்த சந்தேகத்திற்கு வலு சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது.
புதுடெல்லியை சேர்ந்தவன் அமான் கச்ரூ என்ற 19 வயது மாணவன். இவன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தண்டா என்ற இடத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தான்.
மருத்துவராக மக்களுக்கு சேவை செய்வதுடன் வாழ்க்கையிலும் முன்னேற வேண்டும் என்ற கனவுகளுடன் கல்லூரிக்கு சென்ற கச்ரூவுக்கு மூத்த மாணவர்களிடம் இருந்து ராகிங் என்ற பெயரிலான துன்புறுத்தல்கள்தான் வரவேற்பாக அமைந்திருந்தன.
மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், குடித்துவிட்டு, குடிபோதையில் கச்ரூவை பல்வேறு வகைகளில் துன்புறுத்தியுள்ளனர். இந்தத் துன்புறுத்தல்கள் பற்றி தன் பெற்றோரிடம் பலமுறை கூறி கதறியுள்ளான் கச்ரூ.
இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் கச்ரூ மூன்றாம் ஆண்டு மாணவர்களால் சகட்டுமேனிக்கு அடித்து தாக்கப்பட்டுள்ளான். அடி தாங்காமல் பயங்கிய கச்ரூ உயிர் பிரிந்துவிட்டது.
``அமான் கச்ரூ எங்களிடம் ராகிங் கொடுமை பற்றி கூறிக் கொண்டிருந்தான். ஆனால் அது இந்த விபரீதத்தில் போய் முடியும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் எங்கள் வீட்டுப் பையனை இழந்துவிட்டோம். மற்ற மாணவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் இப்போதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்கிறார் அமானின் உறவினரான இந்திரா தர்.
அமானின் தந்தை டான்சானியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் விஜயம் செய்யும் பேராசிரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி விடுதியின் நிர்வாகி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்லூரியின் முதல்வர் பதவி விலகியுள்ளார்.
மாணவர்களிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துவதற்காக விளையாட்டாகத் தான் ராகிங் செய்யப்படுகிறது என்ற வாதம் இருந்து வருகிறது. ஆனால் அது இதுபோன்ற விபரீத முடிவுகளை அடிக்கடி ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment