Monday, March 2, 2009

காலிலே (ஷு)போன் இருந்தால்…


செல்போன்களை மற‌ந்து வைத்துவிடாமல் இருக்க சிற‌ந்த வழி அவற்றை காலில் அணிந்துகொள்வது தான். அதாவது ஷுபோன் வாங்கி பயன்படுத்துவதுதான்.

ஷுபோனா அதென்ன என்று கொஞச‌ம் வியப்படையுங்கள்.

ஆஸ்திரேலியாவின் அடிலைடில் உள்ள பிலின்டர்ஸ் பல்கலையை சேர்ந்த பால் கார்டினர் ஸ்டிஃபன் காலில் அணிந்து கொள்ளகூடிய ஷுபோனை வடிவமைத்துள்ளார்.

செல்போன் பொறுத்தப்பட்ட இந்த ஷுவை காலில் அணிந்து கொள்ளலாம். அழைப்பு வரும் போது கையில் ஷுவை எடுத்து பேசவும் செய்யலாம். முதலில் இந்த ஷுவை ஸ்டிஃபன் விளையாட்டாக உருவாக்கினாலும், அடிப்படையில் ஒரு நோக்கம் இருந்தது.

செல்போன் போன்ற வயர்லஸ் தொழில்நுட்பத்தை தினந்தோறும் பயன்படுத்தும் சாதனங்களில் எப்படி இணைப்பது என்று காண்பிப்பதே அந்த நோக்கம்.

இதனை அவர் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறார்.இந்த ஷுபோனுக்காக அவர் அமைத்துள்ள இணைய பக்கத்தில் உலகின் முதல் வெற்றிகரமான ஷுபோன் இது என்று பெருமைப்பட்டுக்கொண்டுள்ளார்.

இதனை அவர் சும்மா சொல்லிவிடவில்லை. ஷுபோனுக்கென்று ஒரு இலக்கண‌ம் இருப்பதாக சொல்கிறார்.

அந்த ஷு மணிக்கணக்கில் அணியக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு போனைப்போலவே பேச முடிய வேண்டும்.செல்போன் போல் எங்கும் எடுத்துச்செல்ல வேண்டும்.வேறு தொலைபேசி இணைப்பு தேவைப்படக்கூடாது.

இதற்கு முன் ஒரு சில ஷுபோன்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்த இலக்கணத்தை அவை பூர்த்தி செய்த‌தில்லை என்கிறார்.

ஷுபோன்களிலே மிகவும் பிரபலமானது மாக்ஸ்வல் ஸ்மார்ட் என்னும் டிவி பாத்திரம் அணிந்து கொண்டது தான்.

அமெரிக்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய ஜேம்ஸ்பாண்டு பாணியிலான இந்த தொடரில் ஸ்மார்ட் பாத்திரத்தில் நடித்த ஒரு காட்சியில் காலில் இருக்கும் ஷுவை கையில் எடுத்து அட்டகாசமாக பேசுவார். ரசிகர்கள் மத்தியில் இந்த காட்சியும் ,ஷுவும் ரொம்ப பிரபலம்.

ஆனால் இந்த போனில் பேச மட்டுமே முடியும். திருப்பி அழைக்க முடியாது.

எனவே தன்னுடையது தான் உண்மையான முழு ஷுபோன் என்கிறார்.

இப்போதைக்கு வெறும் தொழில்நுட்ப சாகசம் மட்டுமே என்றாலும் எதிர்காலத்தில் இவை பலவிதங்களில் பயன்படும் என்கிறார் ஸ்டிஃபன் .

உதாரணத்திற்கு வயதான நோயாளிள் இதனை அணிந்து கொண்டால் அதில் உள்ள சென்ஸார் அவர்கள் கீழே விழுந்தால் அதை உணர்ந்துக்கொண்டு உடனே மருத்துவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும். மேலும் ர‌த்த அழுத்தத்தை கண்காணிப்பது, இதயத்துடிப்பை கண்காணிப்ப போன்றவற்றையும் மேற்கொள்ள முடியும்.

இந்த போனில் அவர் பேசும் காட்சி யூட்யூப்பில் காணக்கிடைக்கிறது.

——–
link;
http://www.youtube.com/watch?v=COpTlD2WIVE&eurl=http://news.cnet.com/8301-17938_105-10173054-1.html

No comments: